தென்னை மரங்கள் பல்லாயிரக்கணக்கில் பட்டுப்போய் மொட்டையாக நிற்கும் காட்சி நெஞ்சத்தைப் பதற வைக்கிறது


               டந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. "கல்பதரு' என்று அழைக்கப்படும் தென்னை மரங்கள் பல்லாயிரக்கணக்கில் பட்டுப்போய் மொட்டையாக நிற்கும் காட்சி நெஞ்சத்தைப் பதற வைக்கிறது.
      நூறு ஆண்டுகள் வாழக்கூடிய கற்பக விருட்சம் தென்னை மரம். கற்பக விருட்சம் என்றால் அது தென்னையா, பனையா என்ற கேள்வி எழுப்பப்படலாம். தமிழ் மரபின்படி இரண்டுமே கற்பக விருட்சம்தான். கேரள மரபில் தென்னையே கற்பக விருட்சம். கற்பக விருட்சம் அல்லது கல்பதரு என்பது புராண மரபுதான்.
     இந்திய புராணத்தில் மச்சாவதாரத்தில் ஓர் ஊழிக்கதை உண்டு. ஊழிக்குப் பின் எஞ்சிய மனிதன் சத்திய விரதன். சுமேரிய புராணத்தில் ஊழிக்குப் பின் எஞ்சியவன் நோவா சையு சுத்தா. நோவா சையு சுத்தாவைக் கண்டுபிடித்து சஞ்சீவி ரகசியத்தை அறிந்து கொள்ள கில் காமேஷ் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய குறிப்பு பழைய பைபிளில் உண்டு. சுமேரிய சொர்க்கம் டில்முன், கிரேக்க சொர்க்கம் ஒலிம்பஸ். மரண பயம் இல்லாத உலகம்.
       இந்திய புராணத்தில் மரண பயமில்லாமல் வாழ கடலுக்கு அடியில் உள்ள அமிர்தத்தை எப்படிப் பெறுவது என்ற கேள்வி வந்தபோது, மகாவிஷ்ணு தேவர்களையும் அசுரர்களையும் சமாதானம் செய்து, மகேந்திர பர்வதத்தை மத்தாக்க வாசுகி என்ற மலைப்பாம்பு வடமானது. வாசுகியின் தலைப்பக்கம் அசுரர்களும் வால்பக்கம் தேவர்களும் இழுத்துப் பிடித்துக் கடைய முற்பட்டனர். மகேந்திர மலையை அசைக்க முடியவில்லை. பின்னர் மகாவிஷ்ணு 361 பிரம்மாக்களைக் கொண்ட கூர்மமாக, அதாவது ராட்சஸ வடிவுள்ள ஆமையாக அவதாரமெடுத்து கடலுக்குள் சென்று மகேந்திர மலையைப் புரட்டிக் கொடுத்த பின் திருப்பாற்கடல் கடையப்பட்டு முதலில் வந்தது விஷமே. அதை உண்ட சிவன் திருநீலகண்டரானார்.
       இந்த லீலா விநோதத்தில் அடுத்து வந்தது காமதேனு. அதாவது பசு. பகவான் காமதேனுவை வசிஷ்ட மகரிஷிக்கு வழங்கினார். பின்னர் வந்தது ஐராவதம். அதாவது வெள்ளை யானை. அதை இந்திரன் பெற்றான். இறுதியில் வந்ததுதான் கற்பக விருட்சமான தென்னை. விவசாயம் செய்து மண்ணை வளப்படுத்த பசுவுடன் தென்னையையும் பகவான் முனிவர்களுக்கு வழங்கினார்.
     வேதகால வேளாண்மை என்பது ஆநிரைப் பொருளாதாரம். ஆங்கிலத்தில் டஹள்ற்ர்ழ்ஹப் உஸ்ரீர்ய்ர்ம்ஹ் ஆகும். அதற்கு அடிப்படை பசுக்கள், புற்கள், தென்னை போன்ற பயனுள்ள மரங்கள். கூர்மாவதாரம் எடுத்துக்காட்டும் செய்தி இதுவே. சொல்லப் போனால் முனிவர்கள் நடத்திய குருகுல வாசத்தில் வேதம் படிப்பது தியரி. மாடு மேய்த்து விவசாயம் செய்வது பிராக்டிகல் வகுப்பாகும்.
       ஆநிரைப் பொருளாதாரத்திற்குரிய அடிப்படைத் தேவையான உணவு, உடை, வீடு மூன்றையும் தென்னை நிறைவேற்றியுள்ளது. இன்றளவும் பெரும்பாலான பசிபிக் தீவுகளில் ஆதிவாசிகள் உண்பது தேங்காய். இன்று நல வாழ்வில் அக்கறை கொண்ட சிலர் இயற்கை உணவு மட்டுமே உண்கிறார்கள். சமைத்த உணவைத் தவிர்க்கிறார்கள். அதேசமயம் அவர்களின் இயற்கை உணவில் தேங்காய் பெரும்பங்கு வகிக்கிறது. பச்சை ஓலையை மெலிதாய் நறுக்கி அழகுடன் உடையாக அணியும் மரபு பசிபிக் தீவு ஆதிவாசிகளிடம் உண்டு.
    தாகம் தீர்க்க இளநீர், கப்பலை இழுக்கும் வடக்கயிறு முதல் பல கனபரிமாணங்களில் பலவிதமான கயிறுகள் பல தேவைகளை நிறைவேற்றுகின்றன. தென்னங்கள்ளும், தேங்காய் நெய்யும் அருமருந்துகள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் சாதவாகனர் ஆட்சியில் பொருளியல் வளர்ச்சிக்கு அடிப்படை தென்னை வழங்கிய பொருள்களே. ஆகவே, தென்னைதான் கற்பக விருட்சம் என்று கருதுவதில் என்ன தவறு? தவிரவும் இதன் பொருளாதார முக்கியத்துவத்திற்கு மேல் இந்த நாரியல் அக்கால கட்டத்தில் நரபலியை நிறுத்தியுள்ளதாக வரலாற்று மேதை கோசாம்பி கூறுகிறார்.
    கோவிலில் தேங்காய் உடைப்பது நரபலியின் பதிலி என்கிறார். தேங்காயில் குடுமி, கண்கள் மூக்கு எல்லாம் மனிதத் தலை போல் உள்ளதால் மனித பலியின் பதிலியாக தேங்காயை தெய்வம் ஏற்பதால், இன்றளவும் 30 சதவீதம் தேங்காய் சடங்கு ரீதியான தேவையைப் பூர்த்தி செய்து வருவதாகப் புள்ளிவிவரம் உண்டு.
    தமிழ்நாட்டில் வறட்சியால்தான் தென்னை மரம் பட்டுப் போகிறது. இந்தியாவைப் போல் தென்னை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தென்னையில் லாபம் இல்லையென்று தென்னையை அழித்துவிட்டு, செம்பனை என்ற குட்டை பாமாயில் மரங்களை வளர்க்கிறார்கள்.
    மலேசியாவில் தென்னை அழிப்பு தீவிரமாயுள்ளது. பாமாயில் ஏற்றுமதியில் மலேசியா முதலிடம். பாமாயில் இறக்குமதியில் இந்தியா முதலிடம், பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டால் மலேசியப் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும்.
    கடந்த 20 ஆண்டுகளாக தென்னையைப் பற்றிய தவறான தகவல் பரவியதால் உலகளவில் தென்னைப் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது. தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு நலவாழ்வுக்குப் பகை என்றும் பாமாயில் பரவாயில்லை என்றும் வனஸ்பதி விற்பனையாளர்கள் பரப்பிவிட்ட பொய்ப் பிரசாரம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. சூரியகாந்தி எண்ணெய் மட்டுமே நலவாழ்வுக்கு ஏற்றது என்று பன்னாட்டு சமையல் எண்ணெய் முதலாளிகள் ஊடகங்களில் பொய் விளம்பரம் தந்தார்கள்.
     உண்மையை எவ்வளவு நாள்தான் மூடி மறைக்க முடியும்? இந்தியாவின் பாரம்பரிய மூலிகை அறிவியல் தென்னையை கற்பகமாக ஏற்றுக் கொள்ளும்போது தவறு எப்படி ஏற்படும்? ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்த ஆராய்ச்சியில் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு கரையும் தன்மையுடையது என்றும், ரத்தக் குழாயைத் தடிமனாக்காது என்றும் அறிவித்த பின்னரே இப்போது பழையபடி தேங்காய் எண்ணெய்க்கு மவுசு கூடி வருகிறது. சித்தர்கள் கூறுவதை ஏற்காமல் வெள்ளைக்காரன் சொன்னால் ஏற்கும் என்ற மனநிலை நம்மிடம் உள்ளது.
    நமது உணவில் டால்டா பெரும்பங்கு வகிக்கிறது. சமையலில் டால்டாவைப் பயன்படுத்துகிறோம். டால்டாவில் டிரான்ஸ்ஃபேட் என்று சொல்லப்படும் கரையாத கொழுப்பு 9 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் உள்ளது. அது அப்படியே ரத்தத்தில் சேர்ந்துவிடும். டால்டா பெரும்பாலும் பாமாயில் சரக்குதான். ஆனால் எவ்விதமான ஹைட்ரஜனும் செலுத்தப்படாமல் நெய் போலவே உறையும் சக்தி தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. தேங்காய் எண்ணெயில் டிரான்ஸ் கொழுப்பு 2 சதவீதம் மட்டுமே.
    மேலை நாடுகளில் டால்டாவுக்குத் தேங்காய்ப் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். தங்கள் உடல்நலத்தைப் பாதுகாக்கின்றனர். பசு நெய்யிலும் டிரான்ஸ் கொழுப்பு குறைவே. பொதுவாக, பெரிய கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடும் கலாசாரம் நம்மிடம் பரவிவிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கேக்கில் டால்டா உண்டு. டிரான்ஸ் கொழுப்பும் அதிகம். கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு மறுநாள் கொலஸ்ட்ரால் ஏறி மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்கும்.
      மகாத்மா காந்தி மாபெரும் சித்தர். வனஸ்பதி என்ற டால்டாவை பயன்படுத்தக் கூடாது என்று கூறி பசு நெய்யைப் பயன்படுத்தச் சொன்னார். பசு நெய்க்கு நிகர் தேங்காய் நெய். தேங்காய் நெய் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகிவிட்டது. சாதாரணமாக தேங்காய் எண்ணெயில் கொப்பரையில் உள்ள கருப்பு சேர்ந்து காரலை ஏற்படுத்தும். தேங்காயிலிருந்து வெள்ளைப் பகுதியை மட்டும் பிரித்து எடுத்தால் தேங்காய் நெய் கிட்டும்.
     1961ஆம் ஆண்டில் மத்திய தேங்காய் வாரியம், அதற்கானதொரு இயந்திரத்தை ஜெர்மனியிலிருந்து வரவழைத்து மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆய்வு மையத்திடம் ஒப்படைத்தது. இத்தகைய தொழில்நுட்பம் இருந்தும் நரசிம்ம ராவ் பிரதமராயிருந்தபோது, தேசிய அளவில் தேங்காய் நெய் உற்பத்திக்கு விண்ணப்பித்திருந்த பல சிறுதொழில் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க மறுத்துவிட்டார்.
    அன்றே தேங்காய் நெய் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், மேலை நாட்டு ஏற்றுமதி தேவையை இந்தியா நிறைவு செய்து பல்லாயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் வாழ்வில் ஒளி பிறந்திருக்கும். தென்னை மரங்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். சற்று காலம் கடந்தாவது தென்னையின் மகத்துவம் உணரப்பட்டுப் பலர் மீண்டும் தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்துகின்றனர்.
     திண்டுக்கல் மாவட்டத்திற்கு இயற்கையின் இரண்டு கொடை உண்டு. ஒன்று கொடைக்கானல் மலைத்தொடர். மற்றொன்று சிறுமலை. இரண்டுமே வனப்பகுதி. கொடைக்கானல் - பழனி மலைத்தொடர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அங்கிருந்த அரியவகை சந்தனம், செஞ்சந்தனம், தேக்கு, தான்றி, கடுக்காய், ரோஸ்வுட் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. 2013-இல் அரிய விலங்கினப் பகுதி எனக் கருதி சிறுமலையை பாதுகாப்புப் பகுதியாக அறிவித்துள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் சிறுமலையில் உள்ள அரிய வகை மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன.
    இவ்வாறு வாழ்விழந்த பல்லாயிரக்கணக்காக மரங்களுக்காக நாம் செய்யக்கூடியது, கண்ணீர் அஞ்சலி மட்டுமே.