கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்

 
கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகளை அமைக்க அளிக்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கூடங்குளத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணு உலைகளிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ள ராமகிருஷ்ணன் அப்பகுதி மக்களின் அச்சத்தையும் வாழ்வாதரம் குறித்த கவலைகளையும் போக்கும் வரை அங்கு மின் உற்பத்தியை துவக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்புக்கும்,சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை உருவாக்கும் தன்மையுடைய அணுசக்தி பூங்காக்கள் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் எனவும் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.