உயர் ரக சொகுசு கார்களை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்துள்ளனர்.


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான உயர் ரக சொகுசு கார்களை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் என்பவர் வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி செய்து, அதனை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.கார்கள் இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளைப் பின்பற்றாததால், கடந்த 2001-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அதன் பின்னர் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கில் தொய்வு ஏற்படுத்தியதாகக் கூறி, ஜோசப் மற்றும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரி முருகானந்தம் ஆகியோர் மீது 9 பிரிவுகளின் கீழ் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து,ஜோசப்பிடம் இருந்து கார்கள் வாங்கிய நபர்களிடம் விசாரணை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்ற சி.பி.ஐ.அதிகாரிகள் திட்டமிட்டனர்.அதன் ஒரு பகுதியாக சென்னையில் 18 இடங்களில் கடந்த 2 தினங்களாக சோதனை நடத்தினர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, வரி ஏய்ப்பு செய்ததாக ஏராளமான சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசனின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து 11 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதேபோல், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வெங்கடாச்சலத்திற்குச் சொந்தமான 7 சொசுகு கார்களும், எம்ஜிஎம் குரூப் தொழில் நிறுவனம் மற்றும் ஸ்டாலினின் உதவியாளர் ராஜா சங்கரிடம் இருந்து தலா 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், கட்டுமான நிறுவன உரிமையாளரான ஜி.கே. செட்டி ரமனாவிடம் இருந்து 5 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.