கொசுக்களை தூர விரட்டும் புரதசத்து நிறைந்த அசோலா

பசுமை நாயகன் Pasumai Nayagan




       இந்த பாசியில் வடை, போண்டா, பஜ்ஜி... என்று செய்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் அறவே இருக்காது என்பது இதன் ஸ்பெஷல் !!
அசோலா பெரணி வகையை சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். இது கடற் பாசியைப் போன்றதேயாகும்.இதில் புரோட்டீன்,அமினோ அமிலம்,விட்டமின்கள் மற்றும் மினரல் போன்ற அணைத்து வகையான சத்துகளும் உள்ளது. 

வளர்ப்பு முறை
பாலிதீன் ஷீட் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். 5 அடி நீளம், 3 அடி அகலம் என்ற வகையில் தொட்டியில் அளவு இருக்க வேண்டும்.

சூரிய ஒளி படும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்க வேண்டும். தொட்டியில் 7 செ.மீ முதல் 10 செ.மீ உயரம் வரை தண்ணீரை நிரப்பி, ஒரு கிலோ சாணம், ஒரு கைப்பிடி பாறைத்தூள், ஒரு கைப்பிடி அசோலா விதை ஆகியவற்றைப் போட்டுக் கலக்கிவிட வேண்டும்.

(குளியலறையிலிருந்து வரும் தண்ணீர் அல்லது மற்றும் துணி துவைத்து அலசிய 2வது தண்ணீர் என எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.)

பாறைத்தூளில் தான், அசோலா வளர்வதற்கு தேவையான பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகச் சத்துக்கள்... போன்றவை உள்ளன. அதனால்தான், கட்டாயம் பாறைத்தூள் போட வேண்டும் . சில பகுதிகளில், பாறைகள் இருக்காது. அங்கு ஆழ்குழாய்க் கிணறு எடுக்கும் போது, வெளியில் வந்த மண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும். . 7வது நாளிலிருந்து தொடர்ந்து எல்லா நாட்களிலும் அறுவடை செய்யலாம். இதற்கு பிளாஸ்டிக் சல்லடை அல்லது அடியில் ஓட்டை உள்ள தட்டு பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.மாட்டு சாணம், பாறைத்தூள் 7நாட்களுக்கு ஒரு முறை மாற்றி,மாற்றி கொடுக்கவும்.

எல்லாவற்றையும் முறையாகச் செய்தால், அடுத்த ஒரே வாரத்தில் பத்து மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். பாறைத்தூள் கிடைக்கவில்லை என்றால் கடைகளில் விற்கப்படும் ராக்பாஸ்பேட் தூளை ஒரு கைப்பிடி அளவுக்குப் போடலாம். இது இயற்கையானப் பொருள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்...இந்த மண் காய்கறி செடி கொடிகளுக்கு சிறந்த உரம்.

அறுவடை செய்யப்பட்ட அசோலாவை நன்கு தண்ணீரால் கழுவி பயன்படுத்த வேண்டும்.அப்பொழுது தான் சாணத்தின் வாசனை போகும் கால்நடைகளுக்கு கொடுப்பதால் அதிக பால் உற்பத்தி கிடைக்கும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும்.

அசோலா விதைக்கு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவை தொடர்பு கொள்ளுங்கள்.
தொலைபேசி எண்:04652 246296

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் அசோலா வளர்த்து வந்தால் , வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து தோட்டம், கால்நடைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். 
                                      -P.V.உமாதேவி